தமிழ் சினிமாவில் புதுமுகநாயகிகள் அறிமுகமாகும் அளவுக்கு கதாநாயகர்கள் பெரிதாக அறிமுகமாகுவதில்லை. ஒருவேளை புதுமுக நடிகர்கள் அறிமுகமானாலும் ஏதாவது ஒரு சிலர் மட்டும்தான் தங்களுக்கான தனி இடத்தை பிடித்து சினிமாவில் நிலைத்து நிற்கிறார்கள். அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அறிமுகமான புதுமுக நடிகர்களில் ஒரே ஒருவர் மட்டும்தான் ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதாவது லவ் டுடே படத்தை இயக்கி நடிகராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் தான் ரசிகர்களை கவர்ந்த ஒரே புதுமுக நடிகர்.
இவர் ஜெயம் ரவி மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் வெளியான கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படம் நல்ல வெற்றியைப் பெற்ற நிலையில், இரண்டாவதாக லவ் டுடே படத்தை தானே இயக்கி நடித்தார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி வெளியான லவ் டுடே திரைப்படம் வசூல் வேட்டை நடத்தி தயாரிப்பாளருக்கு லாபத்தை குவித்தது. அதன் பிறகு லவ் டுடே திரைப்படம் தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்தது. மேலும் இதன் காரணமாக பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.