தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் நிலையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படமும் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் டிசம்பர் 24-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது.
2 வருடங்களுக்கு பிறகு நடிகர் விஜயை பிரமாண்ட மேடையில் பார்ப்பதற்கு அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலில் இருப்பதோடு குட்டி ஸ்டோரியை கேட்பதற்கும் ஆர்வத்தோடு இருக்கிறார்கள். இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளும் பத்திரிக்கையாளர்கள், ரசிகர்கள், படக்குழுவினர் ஆகியோருக்கு வழக்கமாக டிக்கெட் வழங்கப்படும்.
அதன்படி வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் டிக்கெட் வழங்கப்படும் நிலையில், ஒரு டிக்கெட்டின் விலை எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கு ஒரு டிக்கெட் சுமார் 4000 ரூபாய் வரை விற்பனை செய்வதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.