அண்மையில் RBI அனைத்து முன்னணி வங்கிகளும் அதன் வாடிக்கையாளர்களுக்கு லாக்கர் ஒப்பந்தத்தை ஜனவரி 1, 2023-க்கு முன்னதாக வழங்கவேண்டும் என கூறியது. புது லாக்கர் விதிகள் அந்த தேதியிலிருந்து செயல்படுத்தப்படும். தற்போது அனைத்து லாக்கர் உரிமையாளர்களும் புது லாக்கர் ஏற்பாட்டிற்கான தகுதியை வெளிப்படுத்தி, ஜனவரி 1, 2023-க்கு முன் புதுப்பித்தல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். எந்தவொரு நியாயமற்ற விதிமுறைகள் (அ) நிபந்தனைகளும் அவற்றின் லாக்கர் ஒப்பந்தங்களில் இணைக்கப்படவில்லை என்பதை வங்கிகள் உறுதிசெய்யும். அத்துடன் ஒப்பந்தத்தின் விதிமுறைகள் வங்கியின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வழக்கமான வணிகப்போக்கில் தேவைப்படுவதை காட்டிலும் கடுமையானதாக இருக்காது.
வருகிற ஜனவரி 1, 2023-க்குள் வங்கிகள் ஏற்கனவே உள்ள லாக்கர் வாடிக்கையாளர்களுடன் தங்களது லாக்கர் ஒப்பந்தங்களை புதுப்பிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கியின் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களில் கூறப்பட்டுள்ளது. மத்திய வங்கி கூற்றின் அடிப்படையில், அனைத்து கடன் வழங்குநர்களும் IBAஆல் டிராஃப்ட் செய்யப்பட்ட மாதிரி லாக்கர் ஒப்பந்தத்தைப் பயன்படுத்தலாம். இவை புதுப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்கி இருத்தல் வேண்டும். பெட்டகங்களில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் விலைமதிப்பற்ற பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டால் (அ) தீவிபத்து, கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் வங்கிக் கட்டணத்தை விட 100 மடங்கு வரை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
சமீபத்திய வழிகாட்டுதல்களில், லாக்கர் அறைகளை கண்காணிக்க வங்கிகள் சி.சி.டி.வி பொருத்துவது கட்டாயம் என ரிசர்வ் வங்கி கூறி உள்ளது. இது தவிர்த்து சிசிடிவி தரவுகளை 180 நாட்களுக்கு வைத்திருக்க வேண்டும் எனவும் வங்கிகளை ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. இது ஏதேனும் முரண்பாடுகள் இருக்கிறதா என்பதை சரிபார்க்க உதவும். வங்கி வாடிக்கையாளர்கள் லாக்கரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டால் (அ) ஏற்கனவே வங்கி லாக்கரை பயன்படுத்தினால் அவர்கள் ஜனவரி 1, 2023க்கு முன் லாக்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.