நாடாளுமன்றத்தில் ஒருமித்த உறவுக்கான வயதை குறைக்கும் திட்டம் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்பி பினோய் விஸ்வம் கேட்ட கேள்விக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அந்த பதிலில், குழந்தைகளை பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாக்கும் அடிப்படையில் போக்சோ சட்டம் 2012 நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சட்டம் 18 வயதுக்கு கீழ் உள்ள எந்தவொரு நபரும் குழந்தை என்பதை தெளிவாக குறிப்பிடுகிறது.
18 வயதை அடைந்தவர்கள் மேஜர் வயதை அடைந்தவர்களாக எடுத்துக்கொள்ளும் விதமாக 1875-ல் இயற்றப்பட்ட பெரும்பான்மை வயது சட்டத்தில் கடந்த 1999ஆம் ஆண்டு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த சட்டங்களின்படி ஒருமித்த உறவுக்கான ஒப்புதல் வயது 18 என நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இதனை 16 வயதாக குறைக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.