ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் பகுதியில் உள்ள ரூர்கேலாவில் ஜனவரி 13-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் விதமாக இந்தியா முழுதும் ஹாக்கி உலகக் கோப்பை பயணம் செய்கிறது. அந்த வகையில் மும்பையில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு ஹாக்கி உலகக் கோப்பை வந்தது. இந்த ஹாக்கி உலகக் கோப்பை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்ட நிலையில், அவர் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் ஹாக்கி உலக கோப்பையை வழங்கினார். இந்த உலகக் கோப்பை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டு அரங்கின் மையப் பகுதியில் வைக்கப்பட்டது.
அதன்பின் இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஹாக்கி உலக கோப்பையை கேரள மாநில ஹாக்கி சம்மேள நிர்வாகிகளிடம் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு ஒலிம்பிக் மற்றும் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய அணியில் பதக்கம் பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர்களான தினேஷ் நாயக், திருமால் வளவன், பாஸ்கரன், லெஸ்லி பெர்னாண்டஸ், கோவிந்தா, பிலிப்ஸ் ஆகியோருக்கு உதயநிதி ஸ்டாலின் பரிசுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 100 பள்ளிகளில் அடுத்த 15 நாட்களில் விழிப்புணர்வு ஹாக்கி போட்டிகளை இந்திய ஹாக்கி அமைப்பு, தமிழ்நாடு ஹாக்கி சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்த உள்ளது. மேலும் தமிழகமானது விளையாட்டுத்துறையில் ஒரு முன்னோடி மாநிலமாக உருவாகும் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.