தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் தனுஷ் தற்போது வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்க தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரித்துள்ளார். இந்த படம் தொடர்பாக தயாரிப்பாளர் வம்சி மற்றும் ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒப்பந்தம் போட்ட நிலையில், திடீரென நீதிமன்றம் வரை சென்றுள்ளது. இது குறித்து ஆரண்யா சினி கம்பைன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் வாத்தி படத்தை யாரும் வாங்கி ஏமாற வேண்டாம். ஏனெனில் டிசம்பர் 2-ம் தேதி வாத்தி திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்று அறிவிப்பு வெளியான போது 5 இடங்களில் படத்தை வெளியிட 8 கோடி ரூபாய் பேசி முடிக்கப்பட்டு 5 கோடி முன்பணம் தயாரிப்பாளரிடம் கொடுக்கப்பட்டது.
தீபாவளிக்கு பிறகு ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் என தயாரிப்பு நிறுவனம் கூறிய நிலையில் ஒப்பந்தமும் போடவில்லை படத்தையும் ரிலீஸ் செய்யவில்லை. இதனால் நாங்கள் கொடுத்த முன் பணத்தை திருப்பி கேட்க வட்டி இல்லாமல் திருப்பிக் கொடுப்போம் என்று கூறினர். நவம்பர் 23-ஆம் தேதி 2 கோடி ரூபாய் கொடுத்த நிலையில், நவம்பர் 26-ம் தேதி ஒரு கோடி ரூபாய் கொடுப்போம் என்று கூறிய நிலையில் பணத்தை தரவில்லை.
இந்நிலையில் தற்போது பிப்ரவரி 17-ஆம் தேதி வாத்தி படத்தை ரிலீஸ் செய்வதாக படகுழு அறிவித்துள்ளது. இதனால் நாங்களே படத்தை வெளியிட முடிவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை அணுகிய போது அவர்கள் உரிய பதில் அளிக்காததால் நீதிமன்றத்தை அணுகி உள்ளோம். எனவே வாத்தி படத்தின் 5 ஏரியா விநியோக உரிமை எங்களிடம் இருப்பதால் இடைத்தரகர்கள் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் படத்தை வாங்கி ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.