சென்னை மாவட்டத்தில் உள்ள மாங்காட்டில் இருக்கும் அரசு நடுநிலை பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் சௌபாக்கியம்(40) என்பவர் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். அதே பள்ளியில் பியூலா(35) என்பவர் பள்ளி மேலாண்மை குழு தலைவியாகவும், இல்லம்தோறும் கல்வி திட்டத்தில் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று வகுப்பும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் பள்ளியில் ஆசிரியர்கள் வராத நேரத்தில் தலைமை ஆசிரியரின் அனுமதியோடு பியூலா வகுப்பறைக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்துள்ளார். இதனையடுத்து சௌபாக்கியம் பியூலாவை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு மாங்காடு காவல் நிலையத்திலும், பள்ளி கல்வித்துறை அதிகாரிகளிடமும் பியூலா புகார் அளித்துள்ளார்.
ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு மீண்டும் பியூலாவை சௌபாக்கியம் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த பியூலா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையே பியூலாவின் உறவினர்கள் பள்ளிக்கு சென்று சௌபாக்கியத்தை தாக்க முயன்றனர். பின்னர் விசாரணையில் சௌபாக்கியம் பியூலா குறித்து சமூக வலைதள பக்கத்தில் அவதூறாக பதிவிட்டு, அவதூறான வார்த்தைகளையும் பேசியது உறுதியானது. இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக சௌபாக்கியத்தை கைது செய்தனர்.