Categories
மாநில செய்திகள்

அபூர்வ நோயால் பாதிக்கப்பட்ட மாணவி….. சிறப்பு சிகிச்சை அளிக்க முதல்வர் உத்தரவு…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

திருச்சி விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தால் தற்போது ஏராளமான மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் தான் இருக்கிறது. முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருவதால் கொரோனா தாக்கம் அதிக அளவில் இல்லை. தமிழகத்தில் கொரோனா முதல் தவணை தடுப்பூசி 96 சதவீதம் பேருக்கும், இரண்டாம் தவணை தடுப்பூசி 92 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு கொரோனா மரபணு பரிசோதனையை அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் ஏற்கனவே சென்னையில் கொரோனா மரபணு பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனா குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ‌ இந்நிலையில் சீர்காழியைச் சேர்ந்த 13 வயது மாணவி அபிநயா தோல் அழுகல் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வருக்கு மாணவி வைத்த கோரிக்கை தொடர்பான வீடியோ வைரலானதை எடுத்து முதல்வரின் கவனத்திற்கு மாணவி அபிநயா குறித்த தகவல் கொண்டு செல்லப்பட்டது. அதன் பிறகு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் மாணவி அபிநயா சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உள்ள வாத நோய் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இங்கு மாணவிக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று மாலை நானே மாணவியை நேரில் சந்தித்து விசாரிக்க இருக்கிறேன். பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்களில் இது போன்ற செய்திகள் வரும்போது முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2019-ம் ஆண்டு எந்த நிலையில் இருந்ததோ தற்போதும் அதே அளவில் தான் இருக்கிறது. இந்த மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று நாங்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்ததோடு கோவையிலும் ஒரு எய்ம்ஸ் மருத்துவமனையை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |