தெற்கு ரயில்வே நிர்வாகம் ஒரு முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதிக்கு செல்லும் சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு டிசம்பர் 21-ம் தேதி காலை 8 மணி முதல் தொடங்குகிறது. திங்கள் கிழமை காலை 4.50 மணி அளவில் ராஞ்சியிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் புதன்கிழமை மதியம் 1:55 மணி அளவில் எர்ணாகுளம் வந்தடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட இருக்கிறது.
அதன் பிறகு மறு மார்க்கத்தில் எர்ணாகுளத்தில் இருந்து வியாழக்கிழமை காலை 7.15 மணியளவில் புறப்படும் ரயில் சனிக்கிழமை காலை 4.30 மணிக்கு ராஞ்சியை சென்றடையும். இந்த ரயில் அடுத்த வருடம் ஜனவரி 5, 12, 19, 26 மற்றும் பிப்ரவரி 2 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். மேலும் டிசம்பர் 21-ஆம் தேதி காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இந்த ரயில் தமிழகத்தில் உள்ள திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் மற்றும் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் நின்று செல்லும்.