சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டை ஜெயராம் தெருவில் முகமது உசேன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 11-ஆம் தேதி இரவு முகமது உசேன் தனது தோழியுடன் நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கிழக்கு கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 3 மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி முகமதுவிடம் இருந்த 600 ரூபாய் பணத்தை பறித்தனர்.
இதனையடுத்து முகமதுவின் செல்போனை பறித்து பண பரிமாற்றம் செயலி மூலம் வங்கி கணக்கில் 40 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதுகுறித்து முகமது உசேன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி பள்ளிக்கரணியைச் சேர்ந்த விக்னேஷ், உதயகுமார் இருவரையும் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் தினேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.