உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து பேசிய திமுகவின் டிகே.எஸ். இளங்கோவன், சட்டமன்றத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி. அவர் திராவிட முன்னேற்ற கழகத்தின் வெற்றிக்காக தமிழகம் முழுவதும் சுற்றிசுழன்று பிரச்சாரம் செய்து பணியாற்றியவர். அவரைப் பொருத்தவரை இயக்க தோழராக, இயக்கத்தின் கொள்கைகளை முன்னெடுத்து செல்பவராக திமுக குடும்பத்திலிருந்து வந்தவராக இருக்கிறார். அவரை கட்சி முழுவதுமாக ஏற்றுக் கொண்டது.
அவரது பணிகள் கட்சிகார்களால் பாராட்டப்படுகின்ற பணிகளாக இருக்கின்றன. எனவே அவருக்கு அமைச்சராக கூடிய தகுதிகள் இருக்கின்றன. இது இப்பொழுது தேசிய அரசியல் ஆக மாறி வருகிறது. திராவிடம் என்ற ஒற்றைச் சொல்லை புறக்கணிக்க தேசத்தை ஆட்சி செய்து வருகின்ற ஒரு கட்சி முடிவு செய்து வருகின்றது. இப்போது திராவிடம் என்றால் என்ன ? இது வரலாறு என்ன ? இது குறித்து அறிஞர்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் ? என்பதையெல்லாம் மீண்டும் எடுத்துச் சொல்லும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது.
கிட்டத்தட்ட திராவிடத்திற்கு எதிராக அரசியலை முறியடிக்கின்ற பணி எங்களுக்கு இருக்கிறது. எனவே இதையே தேசிய அரசியலாக பார்க்கலாம். நாத்திகம் நாங்கள் பேசவில்லை. ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று எங்கள் கட்சியை உருவாக்கிய அறிஞர் அவர்கள் சொன்னார்கள். நாங்கள் இதுபோன்ற மக்கள் சமத்துவத்தை முன் நிறுத்தி அரசியல் செய்கிறோம். மனுதர்மத்தை எதிர்த்து, மக்கள் சமத்துவத்தை, தமிழர்களின் பண்பாடான பிறப்புக்கும் எல்லா உயிர்க்குமான என 2000 ஆண்டுகளுக்கு முன்பாக வள்ளுவர் சொன்ன தமிழரின் பண்பாட்டை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம் என தெரிவித்தார்.