தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகின்றது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 2 நாட்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும். காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 20, 21, 23 ஆகிய தேதிகளில் கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது திரும்ப பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் டிசம்பர் 24-ஆம் தேதி வரை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் இருக்கக்கூடும். இதில் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீச கூடும். அதனால் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றார்கள்.