செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், தமிழ்நாட்டில் உட்கார்ந்து கொண்டு அரசியல் பேசி வருகின்ற தமிழக ஆளுநரை.. ஒன்றிய பாரதிய ஜனதா அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதுபோன்று தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து, தற்போது ஒன்றரை கோடி பேருக்கு மேல் தமிழ்நாட்டில் இருப்பதாக தகவல் வருகிறது.
ஆதலால் இதை ஒழுங்குபடுத்த… கட்டுப்படுத்த… வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல் state entry line பர்மிட் முறையை தமிழ்நாடு அரசு உடனடியாக சட்டம் இயற்றி, ஒன்றிய அரசின் அனுமதியைப் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே உறுதி செய்யப்பட வேண்டும். மாநில அரசு வேளையில் 100%, மத்திய அரசு மற்றும் தனியார் துறைகளில் 90 சதவீதம் வேலைவாய்ப்பை உறுதி செய்ய உரிய சட்டத்தை தமிழக அரசு இயற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.
எல்லா மாநிலங்களிலும் அந்த மாநில அரசுகளில் 100 சதவிகித அந்த மாநில மக்களுக்குத் தான் வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். எதையும் நான் புதிதாக கேட்கவில்லை, மத்திய அரசு பதவிகளில் தான் நான் 90 சதவீதம் கேட்கிறேன், தனியார் துறையில் 90% கேட்கிறேன். குஜராத்தில் குஜராத்திகளுக்கு தான் வேலை, அந்த மாநில அரசு பதவிகளில்… கர்நாடகாவில் கர்நாடகாவுக்கு தான் அந்த மாநில அரசு பதவிகளுக்கு வேலை.
தெலுங்கானா – ஆந்திரா பிரிவின் போது கூட ஆந்திராவை சேர்ந்தவர்கள் தெலுங்கானாவில் வேலை செய்தால்,அவர்களை நாங்கள் வெளியேற்றுவோம் என்று தெலுங்கானா அரசு அறிவித்ததை ஏற்றுக்கொண்டு, ஆந்திரா அரசு நாங்கள் அவர்களை திரும்ப பெற்றுக் கொள்வோம் என்று படிப்படியாக திரும்பப் பெற்று, ஆந்திர மாநிலத்தின் உடைய வேலைவாய்ப்பில் அவர்களுக்கு தந்து கொண்டிருக்கிறார்கள். ஆக இது நியாயமான, நீதியான, அந்தந்த மாநில மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்பதற்கான ஒரு கோரிக்கை. இந்தியா முழுவதும் இந்த முறைதான் வேண்டும் என்பது தமிழக வாழ்வுரிமை கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.