சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தண்ணீர் பந்தலார் வீதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வனிதா என்றும் மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய கவிதா என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி அதே பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் முருகன் வேலைக்கு சென்ற பிறகு திடீரென சாமி வந்தவர் போல் வனிதா ஆடியதால் அச்சத்தில் கவிதா அழுதுள்ளார். அப்போது வீட்டில் இருந்த கத்தியால் வனிதா தனது மகளின் தலையில் குத்தியதாக தெரிகிறது. இதனால் ரத்தம் கொட்டி வலியில் அலறி துடித்த கவிதாவை வெளியே விடாமல் வனிதா வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்து கத்தியால் தனது கழுத்தையும் அறுத்துக் கொண்டார்.
இதனையடுத்து வேலை முடிந்து வீட்டிற்கு வந்த முருகன் தனது மகள் தலையில் ரத்தம் சொட்ட சொட்ட அழுது கொண்டிருந்ததை பார்த்து உடனடியாக தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது தாய்க்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வனிதா சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.