திமுகவின் மறைந்த மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் துரைமுருகன், நான் கூட அவரை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் அவங்க அப்பாவை விட கெட்டிக்காரனாக இருக்கிறான் என்று என்னிடத்திலே சொல்லி இருக்கிறார். சில நேரங்களில் தனிப்பட்ட முறையில் இருக்கிறபோது, இந்த கதைகள் எல்லாம் சொல்வார், எனக்கு என்ன குறை. வயசாகிவிட்டது, நாளைக்கு போகலாம்.. அதற்கு பிறகு போகலாம்… ஆனால் இந்த இயக்கம் போய்விடக்கூடாது என்று சொல்வார்.
இன்னொரு இயக்கத்தை உருவாக்குவதற்கு நம்மிடம் ஆள் இல்லை. தியாகராயன் இல்லை, டி.என். நாயர் இல்லை, பெரியார் இல்லை, அண்ணா இல்லை இந்த இயக்கம் போய்விட கூடாது. அதனால் தான் இன்றைக்கு சொல்கிறேன்… இந்த இயக்கம் இருக்க வேண்டும். இந்த ஆட்சி போகுது, வருகிறது. நாளைக்கு போகும் அதற்கு பிறகு வரும், ஆனால் இயக்கம் போய்விட்டால் நம் இனமே போய்விடும். இதற்கு முன்னால் நாம் இப்படி வருவோம் என்று தெரியாமல் விட்டு விட்டார்கள் எதிரிகள்..
இந்த இயக்கம் வளர்ந்தாலும் ஒரு ஆபத்து இல்லை என்று… ஆனால் நாம் வளர்ந்தால் எப்படி இருப்போம் என்று அவர்களுக்கு தெரிந்து போய் விட்டது.. இன்னொரு முறை நாம் கீழே விழுந்தோம் நம்மளை தூக்க மாட்டான். அதோடு மரணத்தில் கொண்டு போய் சேர்த்து விடுவார்கள். ஆகையினால் இந்த இயக்கத்தை கட்டி காப்பதற்கு திராவிட உணர்வு இருக்க வேண்டும், அந்த உணர்வு இருந்தால் தான் இந்த இயக்கத்தை வளர்க்க முடியும் என்று கடைசி வரையில் நின்றவர். அப்பேற்பட்ட ஒரு தியாக உள்ளம் படைத்தவர். இது சாதாரணமானது அல்ல, இப்படிப்பட்ட பெரியவர்கள் இருக்கின்ற காரணத்தினால் தான் இந்த இயக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
எந்த தலைவன் தியாகம் செய்த தொண்டனை திரும்பிப் பார்க்கிறானோ, அவன் பின்னால் அந்த கட்சி நிற்கும். அதைத்தான் தளபதி இன்றைக்கு செய்திருக்கிறார். எனவே இந்த இயக்கம் வாழ்வதற்கு தளபதி அவர்கள் எத்தனையோ முயற்சி எடுத்து இருக்கிறார். இந்த இயக்கத்தை மொழியில் இனம் – பகுத்தறிவு – சுயமரியாதையோடு வளர்க்கப்பட வேண்டும். அந்த இளைய சமுதாயத்திற்கு இந்த கதை எல்லாம் தெரிந்தாக வேண்டும். அது தெரிய வைக்கின்ற காரியத்தை அண்ணன் வீரமணி அவர்கள்… அற்புதமாக செய்கிறார்கள். எனக்கு அதில் மட்டற்ற மகிழ்ச்சி. அந்த இயக்கத் தொண்டை நம்முடைய தோழர்களும் தொடர்ந்து இளைஞர் அணி மாணவரணியினர் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.