சீனாவில் கடந்த மாத இறுதியில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின் இந்தப் போராட்டமானது அதிபர் ஜின்பிங்கிற்கு எதிரான போராட்டமாக மாறியது. அதனால் சீன அரசு மக்களின் கோபத்தை தணிக்க கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்துள்ளது. கடந்த 7-ம் தேதி பெரும்பாலான கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. அதனால் சீனாவில் கொரோனா தொற்று பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் தளர்த்தப்பட்ட பின் முதல் முறையாக கொரோனா பாதிப்பினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது சீன அரசு ஊடகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற இரண்டு பத்திரிக்கையாளர்கள் கொரோனா தொற்றிற்கு உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தகர்த்தப்பட்டதன் காரணமாக சீனாவில் கொரோனா தொடர்பான மரணங்கள் அதிகரித்து வருகிறது எனவும் பல நகரங்களில் உள்ள மயானங்களில் தினமும் 100-க்கும் மேற்பட்ட பிணங்கள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.