தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் ராஜ்கிரண் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி தன்னுடைய முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, சூதாட்டம் என்பது மிக மிக மோசமான விளையாட்டு. இந்த விளையாட்டால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்துள்ளதோடு, தமிழகத்தில் இதுவரை 37 உயிர்கள் பலியாகியுள்ளது. அந்த காலத்தில் சூதாட்டம் என்பது சட்டப்படி குற்றமாக இருந்ததோடு சூதாடினால் காவல்துறையினர் கைது செய்வார்கள்.
ஆனால் தற்போது சூதாட்டம் டிஜிட்டல் மையமாகி ஆன்லைன் ரம்மி என்ற பெயரில் விளையாடப்படுகிறது. இதைத் தடுப்பதற்கு தமிழக அரசு சட்டம் இயற்றினாலும் கூட அதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டுள்ளது. இந்த சமூக சீர்கேட்டை ஊக்குவிக்கும் விதமாக பிரபலங்களும் ஆசை வார்த்தைகளை கூறி பாமர மக்களை சூதாடுவதற்கு கூவி கூவி அழைக்கிறார்கள். நீதிமன்றமும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கவில்லை. இந்த பிரச்சனை எதில் போய் முடியும் என்று தெரியவில்லை என்று பதிவிட்டுள்ளார். மேலும் நடிகர் சரத்குமார் ஆன்லைன் சூதாட்டத்திற்கு ஆதரவாக பேசி வருவதால் அவரைத்தான் ராஜ்கிரண் மறைமுகமாக சாடியுள்ளதாக நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.