கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசுவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான பிரச்சனை தலைதூக்கியுள்ளது. அதாவது ஹிஜாப் அணிந்து பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லக்கூடாது மற்றும் இந்துக்கள் அல்லாதவர்களின் பொருட்களை கடைகளில் வாங்கக்கூடாது போன்ற பல்வேறு விதமான மத பிரச்சனைகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த பஜ்ரங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பேருந்தில் சென்ற தம்பதியை வழிமறித்து பிரச்சனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இரு வேறு சமூகத்தைச் சேர்ந்த ஆண் மற்றும் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் பெங்களூருவில் இருந்து மங்களூருக்கு பேருந்தில் சென்றுள்ளனர். இந்த பேருந்தை குறிப்பிட்ட அந்த சமூகத்தை சேர்ந்த அமைப்பினர் வழி மறித்து தம்பதிகளிடம் பிரச்சனை செய்துள்ளனர். இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சம்பந்தப்பட்டவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் போலீஸ் ஸ்டேஷனில் நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு பெண்ணை அவருடைய குடும்பத்தினருடன் காவல் துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.