தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பதவியேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தை விளையாட்டின் தலைநகராக மாற்றும் திட்டம் உள்ளது. அதே போல் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல தி.மு.க ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் சிறிய அளவிலான விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என கூறியுள்ளார்.
விளையாட்டில் தமிழகம் சிறந்த மாநிலமாக உருவாக வேண்டும் என்றால் பள்ளி அளவில் விளையாட்டுகளுக்கான கட்டமைப்புகளை மேம்படுத்தவும், சிறந்த வீரர்களை உருவாக்கும் விதமாக அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வியை கட்டாய பாடமாகவும், உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விளையாட்டு விடுதிகளுக்கு வருடம் தோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதே போல் பள்ளி அளவிலும் உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து விளையாடு உபகரணங்கள், விளையாட்டு மைதானம், ஆசிரியர் பணியிடங்கள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு முன் வர வேண்டும் என்பது தான் மாணவர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.
இதனையடுத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் விளையாட்டுப் பொருட்கள் தரம் அற்றவையாக உள்ளது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. 120 கல்வி மாவட்டங்களை மையமாகக் கொண்டு தற்போது மாநில திட்டங்கள் மூலமாக உடற்கல்வி சார்ந்த விளையாட்டு உபகரணங்களை வழங்கும் பணி நடைபெற உள்ளது. அதில் 25 ஆயிரம் மதிப்பிலான விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்படுவதாக கூறினாலும் அவை தரமற்றவையாக இருப்பதினால் இரண்டு மாதங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது. அதனால் தரமான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுவதை புதிதாக பொறுப்பேற்றுள்ள விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.