ஜெர்மனியை சேர்ந்த நிறுவனம் ஒன்று செயற்கை கரு மூலமாக குழந்தைகளை உருவாக்குவது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ ஒரு பக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் மற்றொருபக்கம் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது மக்கள் தொகை அதிகரிப்பு உலகின் பெரும் பிரச்சனையாக இருந்த காலம் மாறி தற்போது பல நாடுகளில் ஒன்றிற்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள மக்களை ஊக்குவிக்கும் நிலையில் இருக்கின்றனர். தென்கொரியா, ஜப்பான், பல்கொரியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. இந்த மக்கள் தொகை சரிவிற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
அதில் முதன்மையானதாக பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் கருப்பை நீக்கம் என உடல் ரீதியான காரணங்கள் கருதப்படுகிறது. இது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஐ.வி.எஃப் சோதனை குழாய் மூலமாக குழந்தை பெறுவது என பல்வேறு முறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்நிலையில் வெர்லினை சேர்ந்த உயிரி தொழில்நுட்பவியலாளர் அஷிம் அல்காயிலி என்பவர் செயற்கை கரு மூலம் குழந்தை பெறுவது பற்றிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் நடத்தி வரும் ஆராய்ச்சி குறித்து எச்.ஓ.லைஃப் எனும் பெயரில் அந்த வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலமாக கருக்கலைத்தல், பிரசவ வலி, குறைந்த மாதங்களில் பிரசவிப்பது மற்றும் உடல் ரீதியான குறைபாடுகள் தலைமுறையாக தொடரும் நோய்கள் இல்லாமல் குழந்தைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது என வீடியோவில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் குழந்தை வளர்ச்சியின் போதே குழந்தையின் நிறம், உயரம் என அனைத்தையும் தீர்மானித்து அதன்படி மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலமாக புற்று நோயால் கருப்பையை நீக்கிய பெண்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என ஒரு பக்கம் பல பேர் இந்த ஆராய்ச்சி வரவேற்றுள்ளனர். மற்றொரு பக்கம் குழந்தை பிறப்பை முற்றிலும் செயற்கை தனமாக மாற்றுவது மனித இனத்திற்கு பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் எனவும் இந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.