தமிழக அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் வேலை வாய்ப்பிற்காக விண்ணப்பிப்பவர்களுக்கு சிறப்பு சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 35 ஆவது அமைச்சராக பதவி ஏற்ற சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணி செயலாளரும் ஆன உதயநிதி அவர்களுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அவர் மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு உள்ளிட்டவை அடங்கியிருந்தது. மேலும் இதனை தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு துறையில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தன்னுடைய பணிகள் இருக்கும் என்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அது குறித்து கோரிக்கை முதல்வரிடம் எடுத்துரைக்கப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.