கள்ளக்குறிச்சி மனைவி ஸ்ரீமதி வைத்திருந்த செல்போன்னை காவல்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றால் பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்று சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக நியாயமான விசாரணை நடத்த கோரி அவரது தந்தை ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி சந்திரசேகரன் அமர்வில் நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, மாணவி பயன்படுத்திய செல்போனை ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு வந்த போது மாணவியின் விசாரணை குறித்து நிலவர அறிக்கை முத்தரையிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நான்கு முறை சமன் அனுப்பியும் மாணவி பயன்படுத்திய செல்போனை விசாரணைக்காக இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்தோஷ் தெரிவித்தார். மேலும் இரண்டு மாதங்களின் காவல்துறையின் விசாரணை முடிவடையும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாணவியினுடைய தந்தை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பள்ளி தாளாளர் உள்ளிட்டோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை ரத்து செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாகவும், பிரேத பரிசோதனையின் வீடியோ பதிவுகள் மற்றும் ஜிப்பர் மருத்துவமணையினுடைய அறிக்கை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தங்களது மகள் செல்போன் ஏதும் வைத்திருக்கவில்லை என்றும், விடுதி வார்டனின் செல்போனில் இருந்தே தேவைப்படும்போது தங்களிடம் பேசியதாக தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செல்போனை ஒப்படைப்பதில் என்ன பிரச்சனை உள்ளது என்றும், ஒப்படைக்கவில்லை என்றால் விசாரணை எப்படி நிறைவடையும் என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் மாணவி செல்போன் ஏதும் பயன்படுத்தினாரா ? இல்லையா ? என்ற ஒரு கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த மாணவியின் தந்தையை தரப்பு வழக்கறிஞர், இது குறித்து பெற்றோரிடம் கேட்டு பிரமாணபத்திரமாக தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதி மாணவி ஒருவேளை செல்போன் வைத்திருந்தும், அதை நீங்கள் காவல்துறையிடம் மறைத்து, விசாரணைக்காக ஒப்படைக்கவில்லை என்றால் அது சட்டப்படி குற்றமென்றும், அதற்காக பெற்றோரை விசாரிக்க நேரிடும் என்றும் நீதிபதி தெரிவித்தார். மேலும் மாணவி ஒருவேளை செல்போன் வைத்திருந்தால் அந்த செல்போனை உடனடியாக காவல்துறையினரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் உடைய விசாரணையை பிப்ரவரி மாதம் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்து இருக்கிறார்.