நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்தி கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது 38 சதவீதம் அகவிலைப்படி பெற்று வரும் நிலையில் வரவிருக்கும் 2023 வருடம் அகவிலைப்படி மூன்று முதல் ஐந்து சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 18 மாத கால அகவிலைப்படி நிலுவைத் தொகையை தற்போது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
எனவே இந்த தொகையானது புத்தாண்டை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படலாம் என்று எதிர்பார்த்து வந்த நிலையில் மத்திய அரசு அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மாநிலங்களவையில் எம்பி நரன்பாய் ஜே.ரத்வா மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத அகவிலைப்படி தொகை வழங்கப்படுமா என்று கேள்வி எழுப்பிய போது மத்திய இணை அமைச்சர் கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நிதி பிரச்சனை காரணமாக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட அகவிலைப்படி முடக்கப்பட்டது. இந்த தொகையை வழங்கும் திட்டம் மத்திய அரசுக்கு தற்போது இல்லை என்று பதில் அளித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.