மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கடந்த 2020-2022-க்கு இடைப்பட்ட காலகட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். செவ்வாய்க்கிழமை மாநிலங்களவையில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து பேசிய அவர் கூறியதாவது, தேசிய இயக்கத்தின் ஒரு பகுதியாக இதய நோய், புற்றுநோய், வலிப்பு நோய் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும், மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பாக தொழில்நுட்ப உதவியும், நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த நோய்கள் தொடர்பான மாநில அரசுகள் தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் உதவிகள் செய்யப்படுகின்றது. மருத்துவ ஆராய்ச்சியின் படி நாட்டில் பல்வேறு மாநிலங்களில் யூனியன் பிரதேசங்களில் கடந்த 2020 -ஆம் வருடம் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 லட்சத்து 92,179 பேராக இருந்தது. ஆனால் 2021 -ஆம் வருடம் இது 14 லட்சத்து 26,447 ஆகவும் 2022 -ஆம் வருடம் 14 லட்சத்து 61,427 ஆகவும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் என்.பி. சி டி எஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் கவனத்தில் கொள்ளப்படுகிறது. இந்த நோயை தடுப்பதற்கான உள்கட்டமைப்பு வலுப்படுத்துதல் மேலும் போதிய பணியாளர்களை நியமித்தல், சுகாதார முன்னேற்றம் மற்றும் விழிப்புணர்வை அரசு ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் 30 வயதை கடந்தவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு அவர்களுக்கு வாய்வழி, மார்பு, கர்ப்பப்பை போன்ற இடங்களில் புற்றுநோய் இருக்கிறதா என பரிசோதனைகள் செய்யப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் சுகாதாரம் மற்றும் நல மையங்களில் இந்த பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் சமூக அளவில் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதன் மூலமாக புற்றுநோய் தடுக்கும் பணி முடக்கி விடப்பட்டுள்ளது. இதனையடுத்து புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆரோக்கிய வாழ்க்கை சூழல் தேசிய புற்றுநோய் தினம் உலக புற்றுநோய் தினம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.