நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்கும் வகையில் மனு தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் வாடகை வீட்டை காலி செய்வது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை நேற்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது அவர் கூறியதாவது, “இந்த வழக்கை கிளை நீதிமன்றம் 2 வாரத்திற்குள் விசாரிக்க வேண்டும். மேலும் வழக்கை நீண்ட நாட்கள் கொண்டு செல்லும் நோக்கில் மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. அதற்கு நீதிமன்றங்கள் உதவ கூடாது. தங்களால் முடிந்தவரை வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். இந்நிலையில் வாடகைதாரர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஒவ்வொரு வழக்கிலும் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்றார் போல் முடிவெடுக்க வேண்டும்.
இந்நிலையில் ஒவ்வொருவருக்கும் விரைவில் நீதி கிடைக்க வேண்டும். அப்படி கிடைத்தால் மட்டுமே மக்களுக்கு நீதித்துறையின் மீது நம்பிக்கை ஏற்படும். மேலும் நவீன தொழில்நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் செயல்பட வேண்டும். இதனையடுத்து தேவையற்ற மனுக்களை தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட வேண்டும். இது நீதிமன்றங்களின் நேரத்தை வீணாக்குவதாகும் என உத்தரவிட்டுள்ளார்.