காங்கோ நாட்டில் பலத்த மழை பெய்ததில் வெள்ளம் ஏற்பட்டு நிலச்சரிவு உண்டாகி 141 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கோ நாட்டின் தலைநகரான கின்ஷாசாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதில் நீர் நிலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்தது.
பலத்த மழை மற்றும் வெள்ளத்தை தொடர்ந்து பல பகுதிகளில் கடும் நிலச்சரிவு உண்டானது. இதில் அதிகமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்து போனது. இதற்கிடையில், பலத்த மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் மாட்டி தற்போது வரை 141 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நாட்டின் பிரதமரான ஜீன்-மைக்கேல் சாமா லுகொண்டே, தலைநகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது வெள்ளத்தில் மாட்டி பலியானவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார். வெள்ளத்தால் தங்கள் வீடுகளை இழந்து வாடும் மக்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.