திமுக கட்சியின் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14-ம் தேதி அமைச்சராக பதவி ஏற்கும் நிலையில், தற்போது பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களுக்கு இலாகா மாற்றலாம் என்று கூறப்படுகிறது. அதாவது அமைச்சர் மெய்யநாதன் கூடுதலாக கவனித்து வரும் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை, முதல்வர் ஸ்டாலின் வசம் இருக்கும் சிறப்பு திட்ட அமலாக்கத்துறை, அமைச்சர் கீதா ஜீவனிடம் கூடுதலாக இருக்கும் மகளிர் உரிமைத்துறை போன்றவைகள் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் பெரிய கருப்பனிடம் இருக்கும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமிக்கும், கூட்டுறவுத் துறையை அமைச்சர் பெரிய கருப்பனிடமும் ஒப்படைப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேபோன்று வனத்துறை அமைச்சராக இருக்கும் ராமச்சந்திரனுக்கு சுற்றுலாதுறையும், சுற்றுலாத்துறையின் அமைச்சராக இருக்கும் மதிவேந்தனுக்கு வனத்துறையும் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது அமைச்சர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது ஒரு புறம் இருக்க டெல்டா மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று காத்திருந்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்பதால் தலைமைச் செயலகத்தில் உள்ள 2 அறைகள் புதிதாக புதுப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற போது கொரோனா பரவல் காரணமாக பலர் பங்கேற்காததால், தற்போது உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பங்கேற்கும் விழாவில் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுத்து வரவேற்க துர்கா ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக ஒரு புதிய தகவல் கிளம்பியுள்ளது.