Categories
மாநில செய்திகள்

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கோரிய வழக்கு – இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் இந்திய கிரிக்கெட் வாரியம், மத்திய அரசு பதில் தருமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பரவியுள்ளது. உலகம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ள நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 73 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்குத் தடை விதிக்கக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் அலெக்ஸ் பென்சைகர் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதி சீனாவின் வுஹான் நகரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதை சீன மருத்துவர் லீ வென்லியங் என்பவர் கண்டறிந்தார்.

தற்போது வரை உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் மக்கள் கூட்டமாகக் கூட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மார்ச் 29ம் தேதி தொடங்கி மே 4ம் தேதி வரை ஐபிஎல் போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தப் போட்டிகளைக் காண மைதானங்களில் 30 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை மக்கள் கூடுவார்கள் என்பதால் இந்தப் போட்டிகளுக்குத் தடை விதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஐபிஎல் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பதில் தருமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கில் விசாரணை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போட்டி நடக்கும்போது கொரோனா வைரஸ் வராமல் தடுப்பது குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Categories

Tech |