வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயல் பாதிப்பால் சேதமடைந்த படகுகளில் எந்தெந்த வகை படகுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில கட்டுப்பாடு மையத்தில் சனிக்கிழமை ஆய்வு பணிகளை மேற்கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது கூறியதாவது, புயல் பாதிப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனால் மிகப்பெரிய உயிர் சேதங்கள் தவிர்க்கப்பட்டது.
மேலும் புயல் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட மழைக்கு 5 பேர் பலியாகி உள்ளனர். 98 கால்நடைகள் இறந்துள்ளது. முன்னெச்சரிக்கை அறிவிப்புகளை வழங்கியதால் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர். இந்நிலையில் மழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களில் 694 மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கின்றவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளுக்குள் வீடு திரும்புவார்.
மாண்டஸ் புயலால் படகுகள் சேதம் அடைந்திருந்தால் அவற்றிற்கு நிவாரணங்கள் வழங்க ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளது. அந்த வகையில் கட்டு மரங்கள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.32,000, பகுதி சேதம் அடைந்தால் ரூ.10,000, பைபர் படகுகள் முழுமையாக சேதம் அடைந்திருந்தால் ரூ.75,000, பகுதியாக சேதம் அடைந்தால் ரூ.20,000 வழங்கப்படுகிறது. அதேபோல் இயந்திர படகுகள் முழுமையாக சேதுமடைந்து இருந்தால் 5 லட்சமும், பகுதி சேதம் அடைந்திருந்தால் 3 லட்சமும் வழங்கப்படுகிறது. மேலும் வலைகளுக்கு 10,000 ரூபாய் என ஏற்கனவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் பற்றி ஆய்வு செய்து விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.