தமிழில் பட்டணத்தில் பூதம், சர்வர் சுந்தரம், சாந்தி நிலையம், வசந்த மாளிகை உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானவர் பழம்பெரும் நடிகை ரமா பிரபா. இவர் தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ள நிலையில் அதிக அளவில் சொத்துக்களை குவித்தார். ஆனால் ஒரு கட்டத்தில் தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விட்டார். அந்த சமயத்தில் ரஜினி தனக்கு உதவியதாக ரமா பிரபா கூறியுள்ளார். இது தொடர்பாக ஹைதராபாத்தில் ரமா பிரபா அளித்த பேட்டியில் கூறியதாவது, நடிகர் ரஜினி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை எளிதில் அடையவில்லை.
அவர் எத்தனையோ கஷ்டங்கள் மற்றும் அவமானங்களை தாண்டி தான் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துக்கு வந்துள்ளார். அவரை தற்போது இவ்வளவு பெரிய உயர்வுக்கு வந்தபோதும் தன்னிடம் கஷ்டம் என்று வருபவர்களை வெறும் கையோடு அனுப்பாமல் ஏதாவது உதவி செய்துதான் அனுப்புவார். அந்தப் பட்டியலில் நானும் இருக்கிறேன். அதாவது நான் மிகவும் நம்பிய ஒருவர் என்னை மோசம் செய்ததால் என்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் இழந்து உடுத்திய ஆடையோடு நடுத்தெருவுக்கு வந்து விட்டேன்.
அந்த சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ரஜினி வீட்டுக்கு கை செலவுக்கு மட்டும் பணம் தந்தால் போதும் என்று நினைத்து சென்றேன். ஆனால் ரஜினி கொஞ்சம் கூட யோசிக்காமல் தன்னிடம் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணத்தை எனக்கு கொடுத்தார். அந்த காலத்தில் 40 ஆயிரம் ரூபாய் என்பது மிகப்பெரிய பணமாகும். இந்த பணத்தால் என்னுடைய கஷ்டங்களில் பாதி அளவு குறைந்து விட்டது. மேலும் எப்போதும் நான் அவருக்கு கடன் பட்டிருப்பேன் என்று கூறியுள்ளார்.