மாண்டஸ் புயலானது நேற்று நள்ளிரவில் மாமல்லபுரத்து கரையை கடந்தது. அவ்வாறு புயல் கரையை கடந்த போது 70 -80 கிமீ வரை காற்று பலமாக வீசியது. அத்துடன் மழையும் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளது. இதற்கிடையில் புயல் பாதிப்புக்கு உள்ளான இடங்களில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உட்பட சென்னையின் பல இடங்களில் ஆய்வு செய்து மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கினார். இந்த ஆய்வின் போது அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு மற்றும் சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் உடன் இருந்தனர்.
அதன்பின் செய்தியாளர்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது “மழை பாதிப்புகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிந்தேன். இப்போது புயல் பாதிப்புகளிலிருந்து தமிழகமானது தப்பித்திருக்கிறது. இதனிடையில் நிவாரண பணிகளை அமைச்சர்கள் கவனிக்கின்றனர். இப்போது 25,000 பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்” என்று பேசினார்.