அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிர புயலாக வலுப்பெற்றது. அதன் பின் புயலாக வலுவிழந்து மாமல்லபுரம் அருகே நேற்று இரவு 10 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சுமார் 5 மணி நேரத்திற்கு பின் அதிகாலை 3 மணியளவில் மாண்டஸ் புயல் முழுமையாக கரையை கடந்துள்ளது. இதனையடுத்து இன்று காலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருக்கும் அந்த புயல் அதன் பின் படிப்படியாக வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. இந்த மாண்டஸ் புயல் கரையைக் கடந்த போது சென்னை மற்றும் வடகடலோர மாவட்டங்களில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீசியது.
இந்நிலையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் நிவாரண பணிகள் குறித்து சனிக்கிழமை சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. ஆனாலும் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கின்றனர். மேலும் சனிக்கிழமை மதியத்திற்குள் புயலால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்து விடும். இதுவரை 4 பேர் புயலால் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சில தினங்களில் உரிய நிவாரணம் வழங்கப்படும். சனிக்கிழமை மாலைக்குள் இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புயலால் மீனவர்களின் கட்டுமரம் முழுமையாக சேதமானால் ரூ.32,000 மற்றும் பகுதி சேதமானால் பத்தாயிரமும் வழங்கப்படுகிறது. இந்த நிவாரணத்தை இன்னும் 2 அல்லது 3 நாட்களில் வழங்க முதல்வர் உத்தரவிடுவார் என எதிர்பார்க்கபடுகிறது.