வங்கக்கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் நேற்றிரவு கேளம்பாக்கம் அருகில் கரையை கடந்த நிலையில், ஆந்திர மாநிலத்தில் என்று அதிகாலை முதல் கன மழை பெய்து வருகிறது. அதாவது, ஆந்திர மாநிலத்தின் தெற்கு கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயல சீமா மாவட்டங்களில் கன மழை பதிவாகி இருக்கிறது. இதுகுறித்து அம்மாநில அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரத்தின்படி, திருப்பதி மாவட்டம் நாயுடு பேட்டை பகுதியில் இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக 281.5 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
அத்துடன் இன்று காலை முதல் பல மாவட்டங்களிலும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. புயல் மற்றும் கன மழை தொடர்பான நடவடிக்கைகள் பற்றி ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறார். மேலும் நிவாரண முகாம்களை திறந்து, தேவைப்படும் உதவிகளை வழங்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவு பிறப்பித்துள்ளார்.