பிரசித்தி பெற்ற கோவிலில் கடந்த 15 ஆண்டுகள் வசூலான காணிக்கை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினந்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இந்நிலையில் வரும் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துவிட்டு தங்கம், வெள்ளி, பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவார்கள். இதற்காக கோவிலில் பத்துக்கும் மேற்பட்ட உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
ஆனால் தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஆர்டிஐ தன்னார்வலர் முத்துப்பாண்டி என்பவர் கடந்த 15 ஆண்டுகள் கோவில் உண்டியலின் மூலம் மட்டும் எவ்வளவு காணிக்கை வந்துள்ளது என்பதை கோவில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு கோவில் நிர்வாகத்தினர் கூறியதாவது ” கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை 100 கோடியே 20 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலாகி இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் கடந்த 15 ஆண்டுகளில் 2018-2019 ஆம் ஆண்டில் மட்டும் 9 கோடியே 82 லட்சத்து 84 ஆயிரத்து 220 ரூபாய் வசூலாகியுள்ளது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது” என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.