பயன்படுத்திய முகமூடிகளை புதியது போன்று மறுவிற்பனை செய்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது.
சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்த கொரோனா இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா, உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பயமுறுத்தி வருகிறது. இதுவரையில் கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி மொத்தம் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 299 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அனைத்து நாடுகளும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
கொடிய கொரோனா பரவுவதை தடுக்க அனைத்து நாட்டு மக்களும் முககவசம் அணிந்து கொண்டு தான் வெளியில் செல்கின்றனர். நாளுக்குநாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ளதால் முக கவசத்தின் தேவையும் தற்போது அதிகரித்துள்ளதால், இதனை சாதகமாக பயன்படுத்தி சில நாடுகளில் ஒரு சிலர் அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் போலி முகக்கவசம் தயாரித்து விற்கின்றனர். இவர்களை கண்டறிந்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இப்படி மருத்துவ பொருட்களை அதிக விலைக்கு விற்றாலோ, போலியாக முக கவசம் தயாரித்தலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சீனா உள்ளிட்ட நாடுகள் எச்சரித்துள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் எதிரொலியாக, மருத்துவப் பொருட்களுக்கு அதிகரித்துள்ள தேவையை சாதகமாக்கி கொண்டு, ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ள முகமூடிகளை புதியது போன்று மறுவிற்பனை செய்தால் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று ஜப்பான் அரசாங்கம் கடுமையாக எச்சரித்துள்ளது. அதுமட்டுமின்றி ரூ .7 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில், ஏற்கனவே பயன்படுத்தீய முகமூடிகளை மறுவிற்பனை செய்வதாக புகார்கள் எழுந்ததையடுத்து அந்நாட்டு அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.