திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே 12 வயது சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேட்டுப்பாளையம் பகுதியில் பெற்றோரை இழந்து காப்பாளரின் உதவியுடன் வசிக்கும் 12 வயது சிறுமி, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 6ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் கடந்த 6ஆம் தேதி சுமார் இரவு 7 மணி அளவில் பாலாற்றில் இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார்.
அப்போது அங்கு மது அருந்தி கொண்டிருந்த 3 பேர், சிறுமியை கடத்தி பீர் பாட்டிலை உடைத்து அவரை மிரட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். வெளியே கூறினால் கொலை செய்துவிடுவோம் என்று சிறுமியை மிரட்டி உள்ளனர். இதனையடுத்து அங்கு இருந்த மயானத்தில் சடலத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த துணியை அணிந்து கொண்டு வந்த சிறுமி, காப்பாளரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த காப்பாளர், வாணியம்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த சந்துரு, பார்த்திபன், கண்ணன் ஆகியோரை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.