இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊக்குவித்து வருகிறது. ஏனெனில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பணவீக்கம் அதிகரிக்கிறது. அதோடு பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்துவதால் காற்று மாசுபாடும் ஏற்படுகிறது. இதன் காரணமாகத்தான் மத்திய மற்றும் மாநில அரசுகள் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது. அதன் பிறகு உத்திரபிரதேசம் போன்ற மாநிலங்களில் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குவதற்கு மானியமும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில் தற்போது நாடு முழுதும் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இது தொடர்பான மிகப்பெரிய அறிவிப்பு ஜனவரி மாதத்தில் புத்தாண்டை முன்னிட்டு வரும் எனவும் அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு பிறகு சாமானிய மக்களும் கூட எலக்ட்ரிக் வாகனங்களை சுலபமாக வாங்கலாம் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு நாடு முழுவதும் சார்ஜிங் மையங்கள் அமைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் பிறகு பெட்ரோல் மற்றும் டீசலில் வண்டி இயங்கினால் ஒரு கிலோ மீட்டருக்கு 7 ரூபாய் வரை செலவு செய்ய நேரிடும். ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஒரு கிலோமீட்டருக்கு 1 ரூபாய் மட்டுமே செலவு செய்தால் போதும். மேலும் இந்த அறிவிப்புக்கு பிறகு பெட்ரோல், டீசல் வாங்கும் செலவு மக்களுக்கு மிச்சமாவதோடு, காற்றின் மாசுபாடும் பெரும் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.