Categories
மாநில செய்திகள்

“சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவர்கள்”… அமைச்சர் அன்பில் மகேஷ் பாராட்டு…!!!!!

பள்ளி கல்வித்துறை சார்பாக சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஜெய் கோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் சனிக்கிழமை உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். அவர் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். பின்னர் சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். அப்போது மாணவர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை சைகை மொழியில் பாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

மேலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சைகை மொழியில் கலந்துரையாடி ஊக்கப்படுத்தியுள்ளார். இதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பேசும்போது, தமிழ் மொழிக்கு ஏராளமான சிறப்புகள் உள்ளது. இருப்பினும் சைகை மொழியில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய மாணவர்களுக்கு பாராட்டுகள். மாற்றுத்திறனாளிகளை பெற்ற பெற்றோர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள். அதனால் பெற்றோர்கள் தயவு செய்து தங்களது குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு என தனி திறமை இருக்கிறது. அதில் கவனம் செலுத்தினால் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனையடுத்து பள்ளி மாணவர்களுக்கு திரையிடப்பட்ட ஷ்வாஸ் என்னும் மராத்தி மொழி திரைப்படத்தை மாணவர்களுடன் சேர்ந்து பார்வையிட்டுள்ளார்.

Categories

Tech |