செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் விபி.துரைசாமி, தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தமிழக முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் பார்வை இடுகின்ற பொழுது சென்னை மாநகர மேயர் வணக்கத்திற்குரிய பிரியா அவர்கள், முதலமைச்சர் உடைய காரிலே தொங்கியபடியும், மாநகராட்சியினுடைய கமிஷனர் மதிப்பிற்குரிய பேடி அவர்களும் தொங்கிக் கொண்டு போனது மிகவும் வேதனைக்குரிய, கண்டனத்துக்குரிய ஒரு செயல்.
மகாகவி பாரதியை பாரதி அவர்கள் பிறந்த இந்த தமிழகத்தில் பெண்ணுரிமைக்காக பாடல் எழுதிய தமிழகத்தில், ஒரு பெண் மேயர் இந்த மாதிரி காரிலே தொங்கிக்கொண்டு பார்வையிடுவது தமிழக பாரதிய ஜனதா கட்சி வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதோடு, கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. அதிலும் குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழக கட்சியினுடைய ஏடான முரசொலியில், புலையே சந்திக்கின்ற ஆற்றல் பெற்றது திராவிட மாடல் அரசு என்ற ஒரு தலைப்பு வந்திருக்கிறது.
இந்திய நாட்டில் பல மாநில அரசு முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். யாராவது இதுபோன்ற செய்தியை எல்லாம் வெளியிடுவார்களா ? அதை அந்த கட்சியினுடைய ஏடான முரசொலியிலும், தினகரனிலும் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு இருக்கிறார்கள். இது நகைப்புக்கு உரியது. தமிழக பாரதிய ஜனதா கட்சி முதல்வர் அவர்களைக் கேட்டுக் கொள்வதெல்லாம், தமிழகம் முழுவதும் இந்த புயலால் விவசாயிகள் உற்பத்தி செய்த நெல், கரும்பு, வாழை கால்நடைச் செல்வங்கள் எல்லாம் அழிந்து இருக்கிறது.
அதனுடைய நட்டத்தை தெரிந்து கொள்ள, அந்த நட்டத்திற்கு ஈடாக நிவாரண தொகை வழங்குவதற்கு அதிகாரிகளை உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் அதிகாரிகளை அனுப்பி, விவசாயிகளுக்கு நிவாரண தொகையை காலதாமதம் செய்யாமல் உடனடியாக வழங்கும்படி தமிழக பாரதிய ஜனதா கட்சி கேட்டுக் கொள்கிறது என தெரிவித்தார்.