திமுக கட்சியின் எம்.பி ஆ. ராசா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக கடந்த 2015-ம் ஆண்டு அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் அடிப்படையில் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ஆ. ராசா, அவருடைய மனைவி பரமேஸ்வரி, உறவினர் பரமேஷ் குமார், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, என். ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை செல்டர்ஸ் புரமோட்டர்ஸ் பிரைவேட் இந்தியா லிமிடெட் மற்றும் மங்கள் டெக் பார்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் வழக்கில் சேர்க்கப்பட்டது.
கிட்டத்தட்ட 7 வருடங்கள் நடந்த விசாரணையில் திமுக எம்பி ஆ. ராசா, கோவை செல்டர்ஷ் புரமோட்டர்ஸ், மங்கள் டெக் பார்க் லிமிடெட், என் ரமேஷ் மற்றும் விஜய் சடரங்கனி ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் வருமானத்தை விட இவர்கள் அனைவரும் 5 கோடி 53 லட்சம் அளவிற்கு வருமானம் சேர்த்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது குற்றப் பத்திரிகையில் இடம் பெற்ற அனைவரும் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.