தமிழகத்தில் உள்ள மின் நுகர்வோர்களில் விவசாய இணைப்பு, கைத்தறி நுகர்வோர்கள், முதல் 100 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் தங்களுடைய மின் இணைப்பு எண்னுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழக மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலகெடு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில் EB கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தியது.
தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் உள்ள 2,811 மின் அலுவலகங்களிலும் நேற்று முதல் தொடங்கியது. இந்த முகாம்கள் வரும் டிச.31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10.30 முதல் மாலை 5.15மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்துகொள்ளலாம்.
இந்நிலையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க பணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இணைப்பு பணியின்போது கணினியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டால், மாற்று கணினிகளை தயாராக வைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.