நடிகர் மாதவன் நடித்த “ரன்” படத்தில் நடிகர் விவேக் மலிவான விலைக்கு சிக்கன் பிரியாணி கிடைப்பதாக தெருகடையில் சாப்பிடுவார். அப்போது அது காக்கா பிரியாணி என சாப்பிட்ட பிறகே அவருக்கு தெரியவரும். தற்போது அது போன்ற ஒரு சம்பவம் மும்பையில் நடைபெற்று வருவதாக புகாரளிக்கப்பட்டுள்ளது.
மும்பையில் ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன் ஹரிஷ் ககலானி (71) ரெசிடென்ஷியல் சொசைட்டி கட்டிடத்தின் மேல் தளத்தில் வளர்க்கப்படும் புறாக்களை, ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு ரகசியமாக விற்பனை செய்வதை கண்டறிந்தார். இதையடுத்து அவர் இது குறித்த விசாரணையை துவங்கினார். மேலும் இது சம்பந்தப்பட்ட புகைப்படங்களை சேகரித்தார். அதன்பின் அவர் காவல் நிலையத்தில் முறைப்படி புகாரளித்தார்.
கேப்டன் ஹரிஷின் அளித்த புகாரில், “அபிஷேக் சாவந்த் என்பவர் 2022 மார்ச் முதல் மே வரை தன் வீட்டின் மேற்கூரையில் புறாக்களை வளர்த்து வந்தார். அதனை தொடர்ந்து மும்பையிலுள்ள சில ஹோட்டல்களுக்கு இறைச்சிக்காக அவற்றை விற்றார்” என குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சில புகைப்படங்களையும் ஒப்படைத்து உள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கில் இதுவரையிலும் யாரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.