தமிழகம் முழுவதும் உள்ள கிராம ஊராட்சிகளினுடைய நிதி நிர்வாகத்தை கையாள்வதற்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் அரசு அறிவிக்கும் புதிய திட்டம் ஒவ்வொன்றிற்கும் புதிய வங்கி கணக்குகளை தொடங்கி அதை பராமரிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. அதன் பிறகு மீண்டும் ஆய்வு செய்வது உள்ளிட்ட பல வேலைகளும் இருக்கும். அதன்படி தற்போது கிராம ஊராட்சிகளில் 11 வங்கி கணக்குகளையும் 31 பதிவேடுகளையும் ஊராட்சி துறை பராமரித்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது காகிதம் இல்லா பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அனைத்து பயன்பாடுகளும் கணினி முறையில் மாற்றப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் 12,525 கிராம ஊராட்சிகளில் செய்யப்படும் வங்கி பரிவர்த்தனைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையுடன் நடப்பதில்லை என்பதனால் மாநில அளவில் ஒரே கணக்குகளை கிராம ஊராட்சிகள் கொண்டிருக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட அரசு தற்போது கிராம ஊராட்சிகள், மாநில அரசின் கண்காணிப்பின் கீழ் ஒரே ஒரு கணக்கை தொடங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த கணக்கின் வழியாக மானியங்களை பரிமாற்றம் செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.