கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்துள்ளது. இந்த உத்தரவின் படி வனப்பகுதியை ஒட்டி ஒரு கிலோமீட்டர் தூரம் வரை குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் ஹோட்டல்கள் போன்றவைகள் இருக்கக்கூடாது. அதன் பிறகு ஏற்கனவே இருக்கும் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதோடு, புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கண்டித்து காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கூட்டணி கட்சிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கள்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்ததால் தமிழக-கேரள எல்லைகளில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் லோயர் கேம்ப் கம்பம் மெட்டு சாலைகளில் வாகனங்கள் செல்லாததோடு, இடுக்கி மாவட்டத்திலுள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு செல்லும் ஆயிரக்கணக்கான தொழிலாளிகளை தினந்தோறும் ஏற்றி செல்லும் 500 ஜீப்களும் இயங்கவில்லை. இதனையடுத்து நெடுங்கண்டம், லண்டன் மேடு, புளிய மலை, கட்டப்பனை, குமிளி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப் பட்டிருந்ததோடு, அரசு மற்றும் தனியார் பேருந்துகள், வாடகை வாகனங்கள் போன்றவைகளும் இயங்கவில்லை. மேலும் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.