தமிழகத்தில் மின் இணைப்புடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பு வெளியானதை அடுத்து அதற்கு கண்டனம் தெரிவித்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் எவ்வித முன் அறிவிப்பும் இன்றி மின் அட்டையுடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசு எரிவாயு சிலிண்டருடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியிட்ட போது அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும் தற்போதைய முதல்வருமான மு.க ஸ்டாலின் கடும் கண்டனங்களை தெரிவித்தார். ஆனால் தற்போது முதல்வராக பதவியேற்றதிலிருந்து பால் விலை, சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் மின் கட்டண வரி போன்றவற்றை உயர்த்தியுள்ளர்.
தற்போது மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்ற அறிவிப்பை முறையாக மக்களுக்கு அறிவுரை வழங்காமல் அமல்படுத்தியுள்ளார். அதன் பிறகு ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று அறிவிப்பு வெளியானதை அடுத்து பலரும் அபராதத்துடன் மின்கட்டணத்தை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஊருக்கு தான் உபதேசமா என்ற பழமொழி தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு பொருந்தும்.
இந்நிலையில் தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தும் போது அவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படாதது மிகவும் அதிருப்திக்குரிய விஷயம். ஆதார் அட்டையை மின் அட்டையுடன் இணைக்க வேண்டும் என்ற திட்டமானது மின்சாரம் மானியத்தை குறைப்பதற்கான நடவடிக்கை தான் என்று பலரும் குற்றம் சாட்டுகிறார்கள்.
சொல்வது ஒன்று செய்வதும் ஒன்றும் ஆக இருக்கிறார்கள். இதுதான் திராவிட கோட்பாடா என்று தெரியவில்லை. இதனையடுத்து ஆதார் அட்டை மின் இணைப்பு அறிவிப்புக்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்ததால் தற்போது அந்த திட்டத்தை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் முறையாக தலையிட்டு மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை பொது மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மின் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு 6 மாத காலம் கால அவகாசம் கொடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.