கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள சென்னராயபட்டணம் பகுதியில் இசை ஆசிரியரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரமேஷ் திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டிற்கு கர்ப்பிணி மனைவியை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவ்வபோது ரமேஷ் கர்நாடக மாநிலத்திற்கு சென்று தனது வேலையை கவனித்து வருவார். நேற்று முன்தினம் ரமேஷ் திண்டுக்கல் ஆர்.எம் காலனி 80 அடி ரோட்டில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்திற்கு காரில் வந்துள்ளார். இதனையடுத்து சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு ரமேஷ் உடற்பயிற்சி கூடத்திற்குள் சென்றார்.
சிறிது நேரத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சிலர் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் காரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் தீ விபத்தில் காரின் முன்பகுதி மற்றும் எஞ்சின் முழுமையாக எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் நீண்ட நேரமாக காரின் முகப்பு விளக்குகள் எரிந்ததால் மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.