லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியில் இளமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இளமுருகன் தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் இறப்பு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என இளமுருகனிடம் கேட்டுள்ளார்.
அப்போது கூலி தொழிலாளியான தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என இளமுருகன் கூறியதால் ஜெயபிரகாஷ் 3000 ரூபாய் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். இதுகுறித்து இளமுருகன் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை இளமுருகன் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் லஞ்சம் வாங்கிய துணை தாசில்தாரை கையும், களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயபிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.