ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீகாகுளம் நர்சன பேட்டையில் பூ ஹக்கு என்ற திட்டத்தை முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 2000 கிராமங்களில் மறு சர்வே எடுக்கப்பட்ட நிலங்கள் அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, யாராவது ஒருவர் தன்னுடைய கடின உழைப்பின் மூலமாக கட்சியை தொடங்கி வெற்றி பெற்றால் அவரை எம்.ஜி.ஆர், என்டிஆர் அல்லது ஜெகன் என்று தான் சொல்லுவார்கள். அதுவே கட்சி மற்றும் நாற்காலியை மாமனாரிடமிருந்து பறித்துக் கொண்டால் அவர்களை சந்திரபாபு என்று தான் கூறுவார்கள்.
சீதையை கடத்திச் சென்ற ராவணன் மற்றும் துரியோதனன் போன்றவர்களை தீயவர்கள் என்று தான் அழைக்கிறோம். இதேபோன்று மாமனாரின் முதுகில் குத்தி நாற்காலியை பறித்த ஒருவரையும், அவரின் ஆதரவாளர்களையும் எப்படி அழைப்பது?. தீய சக்தி என்று தானே அழைக்க வேண்டும். டிவியில் வரும் விளம்பர நிகழ்ச்சிகளை நம்பி தீய சக்திகளுக்கு யாரும் வாக்களிக்க வேண்டாம். அரசு அள்ளித்தரும் நலத்திட்ட உதவிகளை நினைத்து யோசித்து முடிவெடுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எம்ஜிஆர் உடன் தன்னை ஒப்பிட்டு பேசியது தற்போது அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.