கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் ராஜகோபால்-அங்காள ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஜேஷ் பாண்டியன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நண்பர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சென்று விட்டு நண்பர்கள் தினேஷ், சுபாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது பெருமாள்மலை-பழனி பிரிவு அருகே சென்றபோது ரேஷன் கடை ஓரமாக நின்ற கார் மீது மோதி நண்பர்கள் கீழே விழுந்தனர். இதனால் கோபமடைந்த கார் உரிமையாளர் உள்பட சிலர் 3 வாலிபர்களையும் தாக்கி விட்டு மோட்டார் சைக்கிளை பறித்தனர். காரை சரி செய்து கொடுத்துவிட்டு மோட்டார் சைக்கிளை வாங்கி செல்லுமாறு கூறினர். இதனால் மன உளைச்சலில் வீட்டிற்கு சென்ற விஜேஸ் பாண்டியன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பெருமாள்மலையை சேர்ந்த தங்கம், வினோத் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர்.