தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பாக வருடம் தோறும் சென்னை தீவுத்திடலில் சுற்றுலா மற்றும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கமாகும். கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை. இந்நிலையில் நடப்பாண்டு பொருட்காட்சியை பிரம்மாண்டமாக நடத்த தமிழக அரசு திட்டமிட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் மற்றும் அரையாண்டு விடுமுறை போன்ற 60 நாட்கள் பொருட்காட்சி நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. பொருட்காட்சியில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவரும் விதமாக வானுக்கும் பூமிக்கும் சுழலும் வகையிலான ராட்சத ராட்டினங்கள் உட்பட பல்வேறு விதமான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகிறது.
இது மட்டும் இல்லாமல் மத்திய மற்றும் மாநில அரசு சார்பாக 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்திய சிறப்பு திட்டங்கள் தொடர்பாக மக்களிடம் கூறும் விதமாக தமிழக அரசு சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. வருகிற 30-ம் தேதி தீவுத்திடலில் பொருட்காட்சி நடத்துவதற்கான டெண்டர் திறக்கப்பட்டு அரங்குகள் அமைக்கும் பணி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் பொருட்காட்சியில் தமிழகத்தில் பண்பாடு, கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை கண்முன்னே நிறுத்தும் விதமாக நுழைவு வாயில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் பெற்ற பின் இறுதி வடிவம் கொடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது.